நெல்லையில் பரபரப்பு.. சொத்து தகராறில் தாத்தாவை கொன்ற பேரன்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் சொத்து தகராறு காரணமாக தாத்தாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தளவாய்தேவர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் அவரது பேரன் கிருஷ்ணராஜாவுக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் தளவாய்தேவரை கிருஷ்ணராஜா அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தளவாய்தேவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கொலை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கிருஷ்ணராஜாவை போலீசார் மூன்று மணி நேரத்திற்குள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சொத்து தகராறு காரணமாக பேரனே தாத்தாவைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
