நெல்லையில் பரபரப்பு... Ph.D. ஆய்வில் சேர்த்துக் கொள்ள ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட பேராசிரியை சஸ்பெண்ட்!
திருநெல்வேலியில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் ஆய்வுப் பணிக்கு ஒப்புதல் வழங்குவதற்காக மாணவியிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட பேராசிரியை உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவர் திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாரா தாக்கர் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாணவி ஆதித்யாவின் ஆய்வுப் பணிகளுக்கு வழிகாட்டு பேராசிரியராக லீலாவதி பாக்கியதாய் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

வழக்கம்போல் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்த மாணவி ஆதித்யா, அதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காகப் பேராசிரியை லீலாவதி பாக்கியதாயை அணுகியுள்ளார். அப்போது, ஆய்வுக் கட்டுரைக்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு நடைமுறைகளை முடிக்கவும் தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் எனப் பேராசிரியை கேட்டுள்ளார். ஆய்வுக் கல்வி கற்கும் மாணவியிடம் கல்வியின் பெயரால் பேராசிரியையே நேரடியாக லஞ்சம் கேட்டது மாணவிக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியரின் இந்தச் செயலைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஆதித்யா, உடனடியாகப் பின்வாங்காமல் தைரியமாக இது குறித்துக் கல்லூரி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளிடம் நேரில் சென்று புகார் அளித்தார். மேலும் தன்னிடம் பேராசிரியை லஞ்சம் கேட்டுப் பேசியபோது பதிவு செய்துகொண்ட அலைபேசி உரையாடல்ஆதாரத்தையும் கல்லூரி நிர்வாகத்திடம் அவர் சமர்ப்பித்தார்.

மாணவியின் புகாரையும், அவர் சமர்ப்பித்த ஆடியோ ஆதாரத்தின் தீவிரத்தன்மையையும் கருத்தில் கொண்ட கல்லூரி நிர்வாகம், உடனடியாக ஒரு சிறப்புக் விசாரணைக் குழுவை அமைத்து இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்தக் குழு நடத்திய தீவிர விசாரணையில், மாணவியிடம் பேராசிரியை லீலாவதி லஞ்சம் கேட்டது உண்மையாக உறுதிப்படுத்தப்பட்டது.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில், கல்விக் கூடத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பேராசிரியை லீலாவதி பாக்கியதாயைச் சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் பெலிசியா கிளாடிஸ் அதிரடியாக உத்தரவிட்டார். கல்வி கற்பித்து நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியரே மாணவியிடம் லஞ்சம் கேட்ட இந்தச் சம்பவம் அப்பகுதி மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
