நெல்லையில் பரபரப்பு... சர்ச் கட்ட எதிர்ப்புப் போராட்டம்... 3 பெண்கள் மயக்கம், ஒருவர் மாரடைப்பால் மரணம்!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் ஊராட்சியில் தேவாலயம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, அதிர்ச்சியில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழநத்தம் வடக்கு ஊரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்புப் பகுதியில் தேவாலயம் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர். இருப்பினும் பணிகள் நிறுத்தப்படாததால், மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று தேவாலயப் பணிகள் மீண்டும் தொடங்கியதை அறிந்த கிராம மக்கள், சம்பவ இடத்திற்குத் திரண்டு வந்து பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சண்முகம் (72) என்ற முதியவர், அங்கு நிலவிய பதற்றம் மற்றும் வாக்குவாதம் காரணமாகத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
முதியவரின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவரது உடலை வாங்க மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியில் 3 பெண்கள் திடீரென மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை கோட்டாட்சியர் மற்றும் உயர்மட்டப் போலீஸ் அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தற்காலிகமாகக் கலைந்து சென்றனர். இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு நீடிக்கிறது.
