விஜய் தொகுதியில் பரபரப்பு... திண்டுக்கல் லியோனி மீது மதுபாட்டில் வீச்சு - வைரலாகும் வீடியோ!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பதற்றத்தை எட்டியுள்ள நிலையில், திருச்சியில் திமுக நட்சத்திரப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது மர்ம நபர் பாட்டில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து, கீழப்புதூர் பகுதியில் திண்டுக்கல் லியோனி நேற்று இரவு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். திறந்த வேனில் நின்றபடி அவர் தனது பாணியில் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
திமுக கூட்டாளி திண்டுக்கல் லியோனி மீது பாட்டில் வீச்சு pic.twitter.com/vGe8XF7Uqp
— K.Ashok adv (@ashok777_kalam) April 19, 2026
கூட்டத்திற்குள் இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென லியோனியை நோக்கிக் காலி மதுபாட்டில் ஒன்றை ஆக்ரோஷமாக வீசினார். அந்த பாட்டில் லியோனி நின்றிருந்த வேனின் பக்கவாட்டில் பட்டு பலத்த சத்தத்துடன் உடைந்து சிதறியது. நல்வாய்ப்பாக, லியோனிக்கோ அல்லது வேனில் இருந்த மற்றவர்களுக்கோ எந்தக் காயமும் ஏற்படவில்லை. பாட்டில் உடைந்த சத்தம் கேட்டதும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.
திருச்சி கிழக்கு தொகுதி இந்தத் தேர்தலில் ஸ்டார் தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. காரணம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதே தொகுதியில் தான் போட்டியிடுகிறார். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியில் ஒரு நட்சத்திரப் பேச்சாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாட்டிலை வீசிவிட்டுத் தப்பியோடிய நபர் யார்? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா அல்லது குடிப்போதையில் செய்த செயலா? என்பது குறித்து திருச்சி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
