சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி, திலகபாமா வாக்களிக்கவில்லை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்த நிலையில், முக்கிய வேட்பாளர்களான திமுகவின் செந்தில் பாலாஜி மற்றும் பாமகவின் திலகபாமா ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோவை தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால் தனது சொந்த ஊரான கரூருக்குச் சென்று வாக்களிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கோவை தெற்குத் தொகுதியில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்கவும், அங்குள்ள 10 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யவும் அவர் அங்கேயே தங்கியிருந்து களப்பணிகளைக் கவனித்து வந்ததே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல், சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் திலகபாமா, தனது சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கவில்லை. அவரும் தேர்தல் நாளான இன்று தனது தொகுதியிலேயே தங்கி, வாக்குச்சாவடிகளுக்குச் சென்று நிலவரங்களை ஆய்வு செய்வதிலும், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது.

முக்கிய வேட்பாளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யாதது குறித்துச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தாலும், "தொகுதி மக்களின் வெற்றிதான் முக்கியம், அதற்காகவே அங்கேயே தங்கிப் பணியாற்றினோம்" என்பதே இரு தரப்பு ஆதரவாளர்களின் பதிலாக உள்ளது.
தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும்.
