தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தனித்தீர்மானம்.... இன்று சட்டப்பேரவையில் முன்மொழிகிறார் முதல்வர் விஜய்!
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே நிரந்தரமாகத் தக்கவைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12.08.2026) அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.
நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக நீடிக்க வேண்டும். 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு இடையே உள்ள தொகுதிப் பகிர்வு மற்றும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் எவ்வித மாற்றமுமின்றித் தொடர வேண்டும்.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறைக்காகக் தள்ளிப்போடாமல், தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே வரும் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தற்போதைய 2.2:1 என்ற விகிதம் மாறாமல் நிலைநிறுத்தப்பட வேண்டும். தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மக்கள்தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி இத்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இன்றைய சட்டமன்றச் சேவையில் இத்தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பின் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
