4 ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் களத்திற்குத் திரும்பும் செரீனா வில்லியம்ஸ் - ரசிகர்கள் உற்சாகம்!

 
செரீனா வில்லியம்ஸ் செரீனா வில்லியம்ஸ்

டென்னிஸ் உலகின் முடிசூடா மகாராணியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது 44-ஆவது வயதில் மீண்டும் தொழில்முறை டென்னிஸ் போட்டிக்குத் திரும்பப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

டென்னிஸ் வரலாற்றில் 23 கிராண்ட்ஸ்லாம் சிங்கிள்ஸ் பட்டங்களை வென்று சாதனை படைத்த முன்னாள் உலக நம்பர்-1 வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், கடந்த 2022-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் தொடருக்குப் பிறகு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ‘பரிணாம வளர்ச்சி’ பெறுவதாகக் கூறி விளையாடுவதை நிறுத்திக் கொண்டார்.

செரீனா வில்லியம்ஸ்

கடந்த நான்கு ஆண்டுகளாகப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த செரீனா, லண்டனில் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குயீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் புல்வெளித் தொடரில் வைல்டு கார்டு நுழைவு மூலம் விளையாட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் கனடாவின் இளம் நட்சத்திரமான 19 வயது விக்டோரியா மபோகோவுடன் இணைந்து செரீனா களம் இறங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது மீள்வருகை குறித்துச் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ், "நல்ல செய்தி வேகமாகப் பரவுகிறது. எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க குயீன்ஸ் கிளப் மிகச் சரியான இடமாக இருக்கும் என நம்புகிறேன். எனது வாழ்க்கையின் மறக்க முடியாத பல தருணங்களைப் புல்வெளி மைதானங்கள் எனக்குக் கொடுத்துள்ளன. மீண்டும் அங்குப் போட்டியிடுவதை எண்ணி உற்சாகமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

செரீனா ஓய்வு அறிவிப்பு

செரீனாவின் இந்தத் திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருந்தாலும், அவர் கடந்த டிசம்பர் மாதமே சர்வதேச டென்னிஸின் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பில் தனது பெயரை மீண்டும் பதிவு செய்திருந்தார். டென்னிஸ் விதிமுறைப்படி ஓய்வு பெற்ற ஒரு வீரர் மீண்டும் விளையாட வர வேண்டுமெனில், 6 மாதங்களுக்கு முன்பே இதில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லண்டனில் விம்பிள்டன் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுகள் மற்றும் பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து வரும் வேளையில், செரீனா வில்லியம்ஸின் இந்த அதிரடி மீள்வருகை அறிவிப்பு இந்த ஆண்டின் மிக முக்கிய விளையாட்டு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.