கர்நாடக அரசுக்குப் பின்னடைவு... மேகதாது அணை திட்ட அறிக்கையை நிராகரித்தது மத்திய நீர்வள ஆணையம்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக, அம்மாநில அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பி நிராகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகள் உள்ளன. ராமநகரம் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி மற்றும் அர்க்காவதி ஆறுகள் இணையும் மேகதாது பகுதியில் ரூ.9,000 கோடி மதிப்பில் 5-வதாக ஒரு புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அணையின் கொள்ளளவு 67.14 டி.எம்.சி ஆகும். இது கர்நாடகாவில் உள்ள மற்ற 4 அணைகளை விடவும் அதிக கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையும் கட்டப்பட்டால் அம்மாநிலத்தின் மொத்த நீர் சேமிப்பு கொள்ளளவு 171.73 டி.எம்.சியாக உயரும்.

மேகதாது அணை கட்டப்பட்டால் தான் தமிழகத்திற்கு உரிய நீர் வழங்க முடியும் என்றும், பெங்களூரு குடிநீருக்காக 16.1 டி.எம்.சி நீர் எடுக்கப்படும் என்றும் கூறி கடந்த ஜூன் 7-ஆம் தேதி கர்நாடக அரசு மத்திய நீர்வளத் துறை ஆணையத்திடம் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகக் கூறி, ஜூன் 29-ஆம் தேதியே மத்திய நீர்வள ஆணையம் அந்த அறிக்கையைத் திருப்பி அனுப்பியுள்ளது.
காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு கர்நாடகாவின் திட்ட அறிக்கை முரண்பாடாக அமைந்திருப்பதே இந்த நிராகரிப்பிற்கு முதன்மை காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதிலில் தான், திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்ட விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கர்நாடக அரசு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுப் புதிதாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து வழங்குமாறு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த அறிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது அம்மாநிலத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மேகதாது விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
