அக்.28ல் உருவாகும் தீவிர புயல் ஆந்திராவில் கரையைக் கடக்க வாய்ப்பு - காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது!

 
புயல் காற்றழுத்த தாழ்வு வங்கக்கடலில்

வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த இந்த அமைப்பு, தொடர்ந்து தீவிரம் அடைந்து வருவதால் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் அவசரகால எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காற்றழுத்த தாழ்வு பகுதி

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. அதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 26-ஆம் தேதியன்று மத்திய வங்கக்கடல் பகுதியில் இது அதிகாரப்பூர்வமாகப் புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக மாறிய பிறகு படிப்படியாக மேலும் தீவிரம் அடைந்து, தீவிரப் புயலாகவும் (Severe Cyclonic Storm) பின்னர் அதிதீவிரப் புயலாகவும் உருமாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தீவிரமடையும் புயலானது, வரும் அக்டோபர் 28-ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்பொழுது மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், குறிப்பாக ஆந்திராவின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்கு இடையே இந்த அதிதீவிரப் புயல் கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் அட்லாண்டிக் கடல் புயல்

புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் அப்பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாகப் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளுக்கு வானிலை மையம் சார்பில் 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் காலகட்டத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த முதல் பெரிய புயல் உருவகம் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பெரும் எதிர்பார்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.