கடும் பாதிப்பு.. 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்.. சீனாவைத் தாக்கிய 'நௌல்' சூறாவளி!
சீனாவில் இந்த ஆண்டில் வீசிய புயல்களிலேயே மிக வலிமையானதாகக் கருதப்படும் 'நௌல்' சூறாவளி, தெற்கு சீனப் பகுதியான குவாங்டாங் மாகாணத்தின் ஹுய்சோ நகரில் அதிகாலை 3:50 மணியளவில் கரையை கடந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
புயல் தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கையாகக் குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 7,15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாகக் குவாங்டாங், சீனா மற்றும் ஹாங்காங் இடையே இயங்கும் 700-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் மற்றும் அதிவேக ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 162 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், சீன வானிலை மையம் இந்த ஆண்டின் முதல் 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துப் பின்னர் படிப்படியாக எச்சரிக்கை அளவைக் குறைத்தது. சூறாவளிப் பாதிப்புகளுக்கு இடையே சீனாவின் வடமேற்குப் பகுதியான கான்சு மாகாணத்தில் பெய்த கனமழையால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

கான்சு மாகாணத்தில் உள்ள வெய்யுவான் பகுதியில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக மலைப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள சுற்றுலாத் தளத்தில் முகாம் அமைத்துக் தங்கியிருந்த பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 174-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர்.
சீனாவின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரண ஆணையம் குவாங்டாங் உள்ளிட்ட தெற்கு மாகாணங்களில் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைச் சீரமைக்கச் சீன அரசு சார்பில் 100 மில்லியன் யுவான் (சுமார் $14.7 மில்லியன் / ரூ.120 கோடிக்கும் மேல்) அவசரகால நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
