"அடுத்த 3 மாதங்களுக்குக் கடும் வறட்சி அபாயம்!" - WMO எச்சரிக்கை!
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண மாற்றங்கள் காரணமாக, வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கமான பருவமழை பொழிவு கணிசமாகக் குறைந்து, கடுமையான வறட்சி ஏற்பட 80% வாய்ப்புகள் உள்ளதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
சர்வதேச வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, உலகளாவிய பருவநிலை மாற்றத்தில் 'எல் நினோ' என்ற இயற்கை நிகழ்வு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளில் உள்ள கடற்பரப்பு நீர், வழக்கத்தை விட வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைவதையே 'எல் நினோ' என்கிறோம்.

இந்த எல் நினோ விளைவு வரும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய அடுத்த மூன்று மாதங்களில் உருவாவதற்கு 80 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக உலக வானிலை அமைப்பு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்த எல் நினோ விளைவு நேரடியாக இந்தியத் துணைக் கண்டத்தின் தென்மேற்குப் பருவமழை அமைப்பைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எல் நினோவின் தீவிரத்தால், இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கமாகக் கிடைக்க வேண்டிய பருவமழை அளவு மிகக் கடுமையான சரிவைச் சந்திக்கும். இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடைக்கால வெப்ப அலைகளின் வீரியம் வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்து, அடுத்த 3 மாதங்களுக்கு நாடு முழுவதும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
