ரஷ்யாவில் பயங்கர பனிப்புயல்... 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!
ரஷ்யாவின் மலைப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கிப் போஸ்னியா நாட்டைச் சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் (Mountaineers) பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்னியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் குழுவினர் ரஷ்யாவில் உள்ள சுமார் 5,350 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாகக் கடுமையான பனிப்புயல் அப்பகுதியைச் சூழ்ந்து தாக்கியுள்ளது.
பனிப்புயலின் கடுமை மற்றும் பூஜ்ஜியத்திற்கும் கீழாகச் சென்ற உறைபனி வெப்பநிலை காரணமாகச் சிக்கிய 5 மலையேற்ற வீரர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்று மற்றும் அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக மீட்புப் படையினரால் உடனடியாக சம்பவ இடத்தை அடைய முடிவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மோசமான வானிலைக்கு மத்தியிலும், உயிரிழந்த வீரர்களின் உடல்களைப் பாதுகாப்பாக மீட்டு இறக்குவதற்கான நடவடிக்கைகளில் ரஷ்ய நாட்டின் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
