சென்னையில் பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்... போலீஸ் காவலை மீறி அதிரடி!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போக்சோ வழக்குக் கைதி ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரை ஏமாற்றி விட்டுத் தப்பியோடிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பதியப்பட்ட போக்சோ வழக்கில் ராஜா என்ற நபர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றக் காவலில் சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த ராஜாவுக்குத் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாகச் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறைத்துறை நிர்வாகம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரைச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வந்து அனுமதித்தது.

மருத்துவமனையில் ராஜாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் கண் இமைக்கும் நேரக் கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொண்ட ராஜா, அவர்களைத் திசை திருப்பிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். கைதி தப்பியோடியதை உணர்ந்த போலீசார் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால், அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

போலீஸ் காவலில் இருந்த போக்சோ கைதி மருத்துவமனையில் இருந்து தப்பிய சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய கைதி ராஜாவைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
