சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... ஜெம் வீரமணி, அவரது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவரது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிரடியாக முடக்கியுள்ளது.

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆகஸ்ட் 29ம் தேதியன்று தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திரசிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தகவல் தெரிவிக்காமல் வீடியோ வைத்திருந்த கணேசன் (செப்.22), சிறுமிகளை அழைத்து வரப் பயன்பட்ட ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு (அக்.05) மற்றும் வழக்கிலிருந்து தப்பிக்க உதவிய சி.என்.எஸ் நிறுவன மேலாளர் சக்திவேல் (அக்.18) என இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புதிய புகார்களின் அடிப்படையில், வீரமணி மீது மொத்தம் 8 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் வீரமணியை நவம்பர் 10-ஆம் தேதி வரை காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கிலிருந்து தப்பிக்கவும், குற்றச்செயல்களுக்கு நிதி உதவி செய்யவும் வீரமணி தரப்பிலிருந்து பெருமளவில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சிறப்புப் புலனாய்வுக் குழு வீரமணி மற்றும் அவரது நிறுவனங்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்கி, சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
