பாலியல் வழக்கு.. பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.சுந்தர் விடுவிப்பு!
பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.சுந்தர், பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர், பி.ஆர்.சுந்தர் தனது அலுவலகத்தில் வைத்துப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, பி.ஆர்.சுந்தரின் மனைவி மங்கையர்கரசி மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நேற்று பி.ஆர்.சுந்தரை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, சட்ட நடைமுறைகளுக்குப் பின் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.
பி.ஆர்.சுந்தரின் கைதைத் தொடர்ந்து, அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களிலும் பல்வேறு தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
