பகீர்... "பாலியல் வன்கொடுமை பயிற்சிப் பள்ளிகள்"... இணையத்தின் இருண்ட உலகம் ... அதிர்ச்சி தரும் புலனாய்வு !
டிஜிட்டல் யுகத்தில் இணையம் பல நன்மைகளைத் தந்தாலும், அதன் மறுபக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதை சிஎன்என் நடத்திய பல மாத கால விசாரணை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட அரட்டைக் குழுக்கள் மற்றும் ரகசியத் தளங்கள் வழியாக 'லைவ்' ஆகப் பதிவு செய்யப்பட்டு பகிரப்படும் ஒரு பயங்கரமான இணையச் சூழல் தற்போது அம்பலமாகியுள்ளது. இதனைப் பயன்படுத்துபவர்கள் இந்தத் தளங்களை "பாலியல் வன்கொடுமை அகாடமி" (Rape Academy) என்று பெருமையுடன் அழைப்பது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
சமீபத்தில் பிரான்சில் டொமினிக் பெலிகோட் என்பவர் தனது மனைவிக்கே மயக்க மருந்து கொடுத்து, பல ஆண்களைக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் உலகையே அதிர வைத்தது. அந்த வழக்கின் பின்னணியில் இணையவழி ஒருங்கிணைப்பு முக்கியப் பங்கு வகித்தது. அத்தகைய தளங்கள் முடக்கப்பட்டாலும், அவை புதிய பெயர்களிலும், புதிய டிஜிட்டல் தளங்களிலும் "பாலியல் வன்கொடுமை பயிற்சிப் பள்ளிகளாக" உருவெடுத்து வருவதை சிஎன்என் கண்டறிந்துள்ளது. குறிப்பாக இவை போன்ற தளங்கள் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 6.2 கோடி முறை பார்வையிடப்பட்டுள்ளன.

இந்த ரகசியக் குழுக்களில், பெண்களுக்குத் தெரியாமல் அவர்களுக்கு எப்படி மயக்க மருந்து கொடுப்பது, வன்முறையை எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்த ஆலோசனைகள் பகிரப்படுகின்றன. சில கொடூரர்கள் பாலியல் வன்கொடுமையை நேரலையில் ஒளிபரப்பி, அதற்குக் கட்டணமாக 'கிரிப்டோகரன்சி' மூலம் பணம் பெறுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 'தூக்க திரவங்கள்' என்ற பெயரில் மயக்க மருந்துகளை விற்கும் சட்டவிரோத வணிகமும் இந்தத் தளங்களின் நிழலில் செழித்து வளர்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் இதயத்தை ரணமாக்குகின்றன. ஸோயி வாட்ஸ் என்ற பெண், தனது கணவரே குழந்தைக்கு வைத்திருந்த மருந்தைக் கொடுத்து தன்னைச் சுயநினைவிழக்கச் செய்து துன்புறுத்தியதைக் கூறி கண்ணீர் மல்கியுள்ளார். கிரிப்டோகரன்சி மற்றும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவல் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துவதால், இத்தகைய குற்றவாளிகளைக் கண்டறிவது சர்வதேச போலீசாருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும், கடுமையான சட்டங்களும் இப்போதே தேவை என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
