பாலியல் குற்றச்சாட்டு... சர்ச்சையில் சிக்கிய குமரி மாவட்ட எஸ்பி இடமாற்றம்: பின்னணி என்ன?

 
பாலியல் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இடமாற்றம்

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான சர்ச்சைகளில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின், தமிழக அரசின் உத்தரவின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய எஸ்பி ஸ்டாலினுக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு துணை காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த தினு அன்ஷுல் நாகர் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டு மற்றும் அவதூறு விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து, தமிழக அரசு இந்த இடமாற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குமரி

கேரளாவிற்குக் கடத்தப்பட்டு வந்த கனிமவள லாரிகளை எஸ்பி ஸ்டாலின் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வந்தார். மேலும், விதிகளை மீறிச் செயல்பட்ட வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் அவர் எடுத்திருந்தார். இந்த நடவடிக்கைகள் காரணமாக கனிமவள மாஃபியாக்களும் லாரிகள் சங்கத்தினரும் அவருக்கு எதிராகத் திரும்பினர். இதன் தொடர்ச்சியாக அவருக்கு இடமாற்றம் கோரி அரசியல் தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

எஸ்பி ஸ்டாலினுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டன. அவர் தனிநபர் விளம்பரங்களுக்காக 'ரீல்ஸ்' மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டதுடன், அவரது பெயரைக் கெடுக்கும் நோக்கில் பெண்களுடன் தொடர்பில் இருப்பது போன்ற போலிச் செய்திகளும் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குமரி

இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில், நேர்மையாகச் செயல்பட்டதாகக் கூறி குமரி மாவட்டப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எஸ்பி ஸ்டாலினுக்குப் பலத்த ஆதரவைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.