பாலியல் குற்றவாளி வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... உதவி ஆணையர்கள் கீதாஞ்சலி, வனிதா, துணை ஆணையர் ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!​​​​​​​

 
வீரமணி

தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதாக எழுந்த தீவிர புகாரின் அடிப்படையில், சென்னை மாநகரத்தைச் சேர்ந்த மூன்று பெண் காவல் அதிகாரிகள் அதிரடியாகக் காத்திருப்புப் பட்டியலுக்கு (Waiting List) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது இதுவரை மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 7 வழக்குகள் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தொடர்பான போக்சோ வழக்குகள் ஆகும்; மற்றொரு வழக்கு சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்காகும்.

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் ஓட்டுநர்கள் பாபு, பார்த்திபன், லாசர் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீரமணி சாந்தி

இந்த வழக்கு கோப்புகளை விசாரிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வழக்கிலும் தேவையான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு தனித்தனியாகத் திரட்டி வருகிறது.

ஜெம் வீரமணி தொடர்பான வழக்குகளின் ஆரம்பகட்ட விசாரணைகள் முறையாக நடத்தப்படவில்லை என்றும், காவல்துறையின் தரப்பில் அலட்சியம் காட்டப்பட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இத்தகைய புகார்களின் அடிப்படையில், இவ்வழக்கு விசாரணையில் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் உதவி ஆணையர்கள் கீதாஞ்சலி, வனிதா மற்றும் துணை ஆணையர் ராஜலட்சுமி ஆகிய மூன்று பெண் காவல் அதிகாரிகளையும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஜெம் வீரமணி  மகள் அர்ச்சனா

ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை வளையம் தற்போது காவல்துறை உயர் அதிகாரிகளையும் எட்டியுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண், மத்திய குற்றப்பிரிவின் முன்னாள் கூடுதல் ஆணையர் ராதிகா உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகள் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

ஜெம் வீரமணி மீதான வழக்குகளைப் பொறுத்தவரை, முன்னாள் காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 7 அதிகாரிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாகக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களது பெயர் அடுத்ததாகத் தாக்கல் செய்யப்பட உள்ள குற்றப்பத்திரிகையிலும் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.