ஓடும் லாரியில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை... தம்பதி உட்பட 3 பேர் அதிரடி கைது!

 
பாலியல் பலாத்காரம் சிறுமி பாலியல் பலாத்காரம் சிறுமி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் விடுவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, ஓடும் லாரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்குற்றச் செயலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் இம்ரான் பாஷா, உதவியாளர் அஜ்மல் பாஷா மற்றும் இச்சதிக்கு உடந்தையாக இருந்த இம்ரான் பாஷாவின் மனைவி பாத்திமா ஆகிய மூன்று பேரை வந்தவாசி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்

கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனை ஒன்றில் வைத்து அச்சிறுமியிடம் பழகிய பாத்திமா, பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ஆற்காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது கணவரின் லாரியில் ஏற்றி அனுப்பிய நிலையில், வழியில் இம்ரான் பாஷாவும் அஜ்மல் பாஷாவும் ஓடும் லாரியில் அச்சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய சிறுமியைப் பெங்களூர் பொதுமக்கள் மீட்டு அங்குள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. இதுகுறித்து பெங்களூர் போலீசார் பதிவு செய்த வழக்கு வந்தவாசி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் மூன்று பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்