சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் !
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த16 வயது சிறுவன் ஒருவன், கோடை விடுமுறைக்காகச் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அந்த வீட்டிற்கு வடபழனி காவல் நிலையத்தில் பணிபுரியும் முப்பத்தைந்து வயதான வேலப்பன் என்ற காவலர் வந்துள்ளார். அவர் அங்கு சிறுவனின் உறவினருடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் நள்ளிரவில் அனைவரும் உறங்கிய சமயத்தில், மது போதையில் இருந்த வேலப்பன் சிறுவன் இருந்த அறைக்குள் சென்றுள்ளார். அங்கு தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்குக் கட்டாயப்படுத்தி மதுவைக் கொடுத்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தச் சிறுவன், அங்கிருந்த கருவியால் காவலரைத் தாக்கிவிட்டு, வீட்டை வெளியில் பூட்டிவிட்டுத் தப்பி ஓடினார்.
தெருவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் சிறுவன் இந்தச் சம்பவம் குறித்து அழுதுகொண்டே புகார் தெரிவித்துள்ளார். உடனே விரைந்து சென்ற அசோக் நகர் காவல் துறையினர், வீட்டில் இருந்த காவலர் வேலப்பனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். மேலும் முறைதவறி நடந்துகொண்ட அந்தப் பயிற்றி பெற்ற காவலரைத் துறையில் இருந்து நீக்குவதற்கும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
