நெஞ்சை உலுக்கும் கொடூரம்... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை!
தமிழகத்தில் பெண்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அனல் பறக்கும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பகுதியில் 7-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநரான நந்தகுமார் (25) என்பவர் மிகவும் அநாகரிகமான முறையில் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்துத் தகவலறிந்த அந்த மாணவியின் தாய் உடனடியாக 'சிங்கப் பெண்' சிறப்புப் படைக்கு அவசரத் தகவல் கொடுத்துள்ளார். துரிதமாகச் செயல்பட்ட சிறப்புப் படையினர் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் பூவிருந்தவல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் 7 வயது சிறுமி ஒருவரை விளையாடிக் கொண்டிருந்தபோது சுடுகாட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுநர் சரவணன் என்பவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தாம்பரம் அடுத்த படப்பை அருகே உள்ள பகுதியில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு அங்கு தங்கி வேலை செய்து வரும் வடமாநில இளைஞர் ஒருவர் மிகக் கொடூரமாக தொல்லை கொடுத்துள்ளார். அந்த பச்சிளம் சிறுமி பயத்தில் அலறி கூச்சலிடவே, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அந்த வடமாநில இளைஞரைப் பிடித்துச் சரமாரியாகத் தர்ம அடி கொடுத்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து போலீசார் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
