பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட செஷல்ஸ் விருது சான்றிதழ் சர்ச்சை - செஷல்ஸ் அரசு விளக்கம்!

 
செஷல்ஸ் மோடி விருது

கடந்த வாரம் செஷல்ஸ் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுச் சான்றிதழில் கடுமையான எழுத்துப் பிழைகள் இருந்ததாகச் சமூக வலைதளங்களில் எழுந்த பெரும் சர்ச்சைக்குச் செஷல்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கடந்த ஜூன் 28, 2026 அன்று செஷல்ஸ் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் பசுமை ஆளுமை, சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் நீலப் பொருளாதார மேம்பாட்டுப் பங்களிப்பைப் பாராட்டி, அந்நாட்டின் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி மூலம் 'கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹாரிசன்' என்ற உயரிய அதிபர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்தகைய கௌரவம் உலகத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் சான்றிதழின் புகைப்படம் இணையத்தில் வெளியான போது நெட்டிசன்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் அதில் இருந்த சில தவறுகளைச் சுட்டிக்காட்டினர்.

சான்றிதழில் குடியரசு என்பதைக் குறிக்கும் 'Republic' என்ற வார்த்தை 'Repubblic' என்றும், நாட்டின் பெயரான 'Seychelles' என்பது 'Seycheeles' என்றும் தவறாக அச்சிடப்பட்டிருந்தது. எழுத்துப்பிழைகள் மற்றும் சான்றிதழ் முத்திரையில் இருந்த குளறுபடிகள் காரணமாக, இந்த விருது போலியானது என்றும், அவசர அவசரமாகச் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் வடிவமைப்பு கருவிகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டது என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் ராஜதந்திர ரீதியாக விவாதப் பொருளாக மாறியதை அடுத்து, செஷல்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பிரதமரின் வருகை மற்றும் இந்த புதிய விருதை வழங்கும் திட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் (அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு 3 நாட்களுக்குள்) இறுதி செய்யப்பட்டது. கால நெருக்கடி காரணமாக, சான்றிதழின் ஆரம்பகட்ட வரைபடத்தை உருவாக்குவதற்கும் வடிவமைப்பு செய்வதற்கும் டிஜிட்டல் வடிவமைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டது உண்மைதான். அதனால்தான் அந்தத் தவறான எழுத்துப்பிழைகள் மற்றும் முத்திரை பிழைகள் விழுந்திருந்தன.

இணையத்தில் பிழைகளுடன் பரவிய சான்றிதழ் நகலானது, இறுதி செய்யப்பட்ட வடிவம் அல்ல. அது பொதுவெளியில் கசியக் கூடாத ஒரு ஆரம்பகட்ட வரைவு மட்டுமே ஆகும். இந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்துத் துறை ரீதியான ஆய்வுகள் நடந்து வருகின்றன."

மேலும், "இந்தத் தவறுகளை அதிகாரிகள் முன்கூட்டியே கண்டறிந்து, பிழைகள் அனைத்தும் முழுமையாகத் திருத்தப்பட்டு, அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் பெற்ற முறையான மற்றும் உண்மையான இறுதி சான்றிதழ் அச்சிடப்பட்டது. அந்தத் துல்லியமான, பிழையற்ற அசல் வடிவமே செஷல்ஸ் அதிபர் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முறைப்படி மேடையில் ஒப்படைக்கப்பட்டது. எனவே, பிரதமரிடம் நேரடியாக வழங்கப்பட்ட அசல் சான்றிதழில் எந்த எழுத்துப் பிழைகளோ அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளோ இல்லை" என்பதை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக உறுதிப்படுத்தி, தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளது.