தனிக்கட்சி தொடங்கும் ஷாநவாஸ்..? திருச்சி கிழக்கில் போட்டி?!

 
ஆளூர் ஷா நவாஸ் ஆளூர் ஷா நவாஸ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய முகமும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ், விசிகவிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்குவது குறித்தும், வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்துக் களம் காண்பது குறித்தும் வெளிநாட்டுப் புள்ளிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டாலும் ஆளூர் ஷாநவாஸ் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டுப் புள்ளிகள், ஆளூர் ஷாநவாஸுக்கு ஒரு முக்கிய அரசியல் வியூகத்தை வகுத்துக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆளூர் ஷா நவாஸ்

கடந்த 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தலித் எழில்மலை பாமகவிலிருந்து விலகிய அரசியல் சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற சுமார் 2 லட்சம் வாக்குகள் தான், அந்தப் புதிய கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் அங்கீகாரத்தையும் பலத்தையும் தேடித்தந்தது.

அதே பாணியை ஆளூர் ஷாநவாஸும் தற்பொழுது கையில் எடுக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, விரைவில் வரவிருக்கும் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தனி வேட்பாளராகவோ அல்லது புதிய கட்சி சார்பிலோ களம் இறங்கி, குறைந்தபட்சம் 15,000 வாக்குகள் வரை பெற்றுத் தனது தனிப்பட்ட அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆளூர் ஷாநவாஸ்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தனது செல்வாக்கை நிரூபிப்பதன் மூலம், தொடங்க திட்டமிட்டுள்ள புதிய கட்சிக்குத் தமிழக அளவில் நல்ல ஊடக வெளிச்சம் கிடைக்கும் என்றும், அது வரும் காலங்களில் மற்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான கதவுகளைத் திறந்துவிடும் என்றும் அந்த ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன.

எனினும், இந்தத் தனிக்கட்சித் தொடக்கம் மற்றும் திருச்சி கிழக்கு போட்டி குறித்த தகவல்கள் அனைத்தும் வெறும் யூகங்களா அல்லது ஆளூர் ஷாநவாஸ் விசிகவிற்குப் பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.