ரூ.200 கோடி கடனில் சிக்கித் தவிக்கும் ஷாலினி? .. அஜித்தின் விளம்பர ஒப்பந்தங்கள் குறித்து பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு!
நடிகர் அஜித் குமாரின் அடுத்த திரைப்படமான 'டேர் டெவில்' தயாரிப்புப் பணிகள் தொடர்பாகவும், படத்திற்காக அவரது மனைவி ஷாலினி ரூ.200 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்துகள் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள 'டேர் டெவில்' திரைப்படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் பின்னணி குறித்துப் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்குப் பிறகு அஜித்தின் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்னணித் தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என்றும், அவர் கேட்கும் ரூ.185 கோடி சம்பளமே இதற்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் தயாரிப்பாளர்களைத் தேடியும் அமையாததால், படத்தைத் தானே தயாரிக்க அஜித் முடிவு செய்துள்ளார். அதன்படி, நடிகை ஷாலினி தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. இந்தப் பிரம்மாண்டப் படத்தைத் தயாரிப்பதற்காகத் திரையுலகின் இரண்டு பிரபல பைனான்சியர்களிடம் ஷாலினி ரூ.200 கோடி கடன் வாங்கியுள்ளதாகப் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக விளம்பரப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்த அஜித் குமார், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஜித் தற்போது பிரபல பிஸ்கட் நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடித்துள்ளதாகவும், அதன் மூலம் அவருக்குப் பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தனது கார் பந்தயப் போட்டிகளுக்கான செலவுகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அஜித் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அவரது கார் பந்தயத்திற்கு அந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்யவுள்ளதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

தனது தேவைக்கு ஏற்ப அஜித் கொள்கைகளை மாற்றிக் கொள்வதாகப் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார். ரசிகர் மன்றங்களைக் கலைத்து விட்டு தற்போது விளம்பரப் படங்களில் நடிப்பதையும், பணம் தேவைப்படும் போது தனது பழைய நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொள்வதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் இறுதிச் சடங்கிற்கு அஜித் நேரில் செல்லாததையும், இரங்கல் செய்தி வெளியிடாததையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
தனக்கென ஒரு தனிப் பாதையில் பயணிக்கும் அஜித்தின் இந்தப் புதிய அணுகுமுறை, 'டேர் டெவில்' திரைப்படம் வெளியாகும் போது எந்த அளவிற்கு வெற்றியைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
