"பனையூருக்கு நான் வரட்டுமா?".. விஜய்க்கு ஜூலி சவால்!

 
ஜூலி

வேலூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய கருத்துகளை விமர்சித்து ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக ரசிகர்கள் ஜூலியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அதற்குப் பதிலடியாகப் புதிய வீடியோ ஒன்றை ஜூலி வெளியிட்டுள்ளார்.

ஜூலி வெளியிட்டுள்ள வீடியோவில், "வேலூர் பரப்புரையில் நீங்கள் பேசியதில் ஒன்றுமே இல்லை என்ற ஆதங்கத்தில்தான் நான் வீடியோ போட்டேன். அதற்காக தவெக ரசிகர்கள் என்னைச் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகிறார்கள். நான் போட்ட வீடியோவை நீக்கப் போவதும் இல்லை, என் கருத்திலிருந்து பின்வாங்கப் போவதும் இல்லை.  என்னை மிரட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியும் , ஆனால் என்னைச் சார்ந்தவர்களையும் குடும்பத்தினரையும் மிரட்டுவது ஏற்கத்தக்கதல்ல என்று ஆதங்கப்பட்டுள்ளார்.


"விஜய் அண்ணா... என்னை நீங்கள் பழிவாங்க வேண்டுமென்றால், நான் ஒன்று வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். நீங்கள் பனையூரை விட்டு வெளியே வரமாட்டீர்கள் எனத் தெரியும், வேண்டுமானால் நானே பனையூர் வருகிறேன். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என ஜூலி சவால் விடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தவெக ரசிகர்கள் ஒரு பெண்ணிடம் எவ்வளவு கண்ணியமாக நடக்கிறார்கள் என்பதை அவர்களது கமெண்ட்டுகளைப் படித்துப் பார்த்தாலே தெரியும் எனப் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

ஜூலி

சமீபகாலமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஜூலிக்கும் தவெக ரசிகர்களுக்கும் இடையிலான இந்தப் போர் இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.