சின்ன வெங்காயம், பூண்டு விலை கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
சின்ன வெங்காயம் பூண்டு

அன்றாடச் சமையலுக்கு மிக முக்கியமான அத்தியாவசியப் பொருட்களான சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றின் விலை சென்னை சந்தையில் ஒரே நேரத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையின் முக்கிய வர்த்தக மையமான கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையிலேயே தரத்தைப் பொறுத்துச் சின்ன வெங்காயம் கிலோ ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலையே இத்தனை உச்சத்தில் இருப்பதால், வெளிச்சந்தை மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.250-ஐ தாண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்திற்கு இணையாகப் பூண்டின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோ பூண்டு அதன் தரம் மற்றும் அளவைப் பொறுத்து ரூ.230 முதல் ரூ.320 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகச் சமையலில் குழம்பு, ரசம் மற்றும் தாளிப்பு வகைகளுக்குத் தவிர்க்க முடியாத மூலப்பொருட்களாகச் சின்ன வெங்காயமும் பூண்டும் விளங்குகின்றன. இவை இரண்டின் விலையும் ஒரே சமயத்தில் கிலோ ரூ.200-க்கும் மேல் சென்றுள்ளது குடும்ப பட்ஜெட்டைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

பூண்டு

வரத்து குறைவு மற்றும் பருவமழை பாதிப்பு காரணமாகவே இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இல்லத்தரசிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.