“அவள் ஒரு தெய்வம்” - தாமிரபரணி ஆற்றுக்குச் 'சட்டபூர்வ ஆளுமை' அந்தஸ்து வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணியை வெறும் நதியாகப் பார்க்காமல், தெய்வமாகக் கருதி அதற்குச் 'சட்டபூர்வ ஆளுமை' (Juristic Person) அந்தஸ்து வழங்கிச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு தங்களது தீர்ப்பில், "தாமிரபரணி நதி இந்துக்களால் ஒரு தெய்வமாக வணங்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அவள் ஒரு தெய்வம் என்பதால் அவளது ஆளுமை அந்தஸ்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்."
"தாமிரபரணியை மாசுபடுத்த யாருக்கும் உரிமையில்லை. நதியை மாசடையச் செய்வது சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுவது மட்டுமின்றி, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-இன் கீழ் சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும், நதியின் சொந்த உரிமைகளையும் மீறும் செயலாகும்."
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மே மாதத்தில் மட்டும் தாமிரபரணியில் இருந்து 86 முதல் 90 டன் ஆடைகள், 1,385 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், 220 கிலோ கண்ணாடி பாட்டில்கள் மற்றும் டன் கணக்கில் கழிவுகள் அள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் துணிகள், பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை வீசுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இறந்தவர்களின் அஸ்தியை மட்டும் ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அஸ்தியைச் சுடப்படாத களிமண் பானையில் மட்டுமே எடுத்து வர வேண்டும். அஸ்தியை மட்டுமே ஆற்றில் கரைக்க வேண்டும்; பானையை ஆற்றில் வீசக் கூடாது.
சட்டங்களால் மட்டுமே நதியைத் தூய்மைப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், "மனிதர்களின் இயல்பு மாற வேண்டும். கடலாமைகள் வேட்டையாடப்பட்ட போது, ஒரு மத போதகர் அதை 'தாய் வீட்டிற்கு வரும் கர்ப்பிணிப் பெண்ணுடன்' ஒப்பிட்டுப் பேசிய பிறகுதான் வேட்டை நின்றது. சட்டத்தால் முடியாததை மனமாற்றம் சாதித்தது. எனவே, இந்தியாவைப் போன்ற நாட்டில் நீதித்துறை ஆன்மீகச் சூழலியலுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்" எனக் கருத்து தெரிவித்தனர்.

பாபநாசம் தாமிரபரணி கரையில் அமைந்திருந்த 400 ஆண்டுகள் பழமையான 'ஆனந்தவிலாஸ்' மண்டபத்தை ஆக்கிரமிப்பு எனக் கூறி வெளியேற அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதை எதிர்த்து சீவனுபாண்டியன் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், "வருவாய்த்துறை ஆவணங்களின்படி அது ஆற்றுப் புறம்போக்கு; கரையை ஆற்றிலிருந்து பிரிக்க முடியாது" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியது.
