பெற்றோர்களே உஷார்... பள்ளி மாணவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி !

 
ஷிகெல்லா ஷிகெல்லா

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பள்ளி மாணவன் ஒருவனுக்கு புதிய வகை பாக்டீரியா பாதிப்பான ஷிகெல்லா தொற்று இருப்பது தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. கோலியாடி மார் பேசிலியோஸ் ஏ.யு.பி. பள்ளியில் படித்து வரும் அந்த மாணவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. இந்தத் திடீர் நோய்த்தொற்று பரவல் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்தத் தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுவன் உள்பட அவனது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் தற்பொழுது பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் இதே போன்ற நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்திருந்த மற்ற 14 பேருக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிர்ஷ்டவசமாக அந்த 14 பேருக்கும் கடுமையான பாதிப்புகள் ஏதும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்கு காய்ச்சி பருகுமாறும் சுகாதாரமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.