56 பேரின் முதுகுகளின் மீது தாவி கின்னஸ் சாதனை படைத்த ஷெப்பர்ட் நாய்!
கனடாவில் வரிசையாகக் குனிந்து நின்ற 56 மனிதர்களின் முதுகுகள் மீது மின்னல் வேகத்தில் ஓடித் தாவிக்குதித்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இன நாய் ஒன்று புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனிபர் பிரேசர் என்பவர் வளர்த்து வரும் 'சார்டோன்' என்ற ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனப் பெண் நாய் இந்த அரிய சாதனையைப் படைத்துள்ளது.
எட்மண்டன் நகரில் உள்ள 'எட்மண்டன் ரிவர்ஹாக்ஸ்' பேஸ்பால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தச் சாதனை அரங்கேறியது. மைதானத்தில் வரிசையாகக் குனிந்து நின்ற 56 தன்னார்வலர்களின் முதுகுகள் மீது இந்த நாய் பாய்ந்து ஓடியது.
ஒரு நிமிடத்திற்குள் 56 பேரைக் கடக்க வேண்டும் என்ற கின்னஸ் விதியின்படி, நடுவர்கள் சிக்னல் கொடுத்ததும் சிறுத்தையைப் போலப் பாய்ந்த சார்டோன், சற்றும் நிலைகுலையாமல் வெறும் 16 விநாடிகளில் 56 பேரையும் கடந்து எல்லையை அடைந்தது.
மனிதர்களுக்குக் காயம் ஏற்படாத வகையிலும், வேகத்தைக் குறைக்காமலும் ஓடுவதற்காக இந்த நாய்க்கு மிக நுணுக்கமான பயிற்சிகள் வழங்கப்பட்டதாக அதன் பயிற்சியாளர் ஜெனிபர் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையை கின்னஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
