செப்டம்பர் 11 வரை நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிக ரத்து!

 
காங்கேசன்

 

 

 

நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் விதிமுறை ஆய்வுகளின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இச்சேவையை விரைவில் மீண்டும் தொடங்குவதற்கான பழுதுபார்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

நாகை - இலங்கை வழித்தடத்தில் இயங்கும் பயணிகள் கப்பலில், வணிக கடல்சார் துறை (Maritime Board) அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கப்பலில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் பாதுகாப்புச் சீரமைப்புகள் கண்டறியப்பட்டன. இதனைக் சுட்டிக்காட்டிய அதிகாரிகள்,  முழுமையாகச் சரிசெய்யும் வரை பயணிகள் கப்பல் சேவையை இயக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.இதன் காரணமாக, பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை முழுமையாக உறுதி செய்யும் வகையில் கப்பலில் தேவையான சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

 

கப்பலை இயக்கிவரும் சுபம் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பாதுகாப்புப் பணிகள் முழுமை பெறும் வரை செப்டம்பர் 11-ஆம் தேதி வரையிலான அனைத்துத் திட்டமிடப்பட்ட பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாகையிலிருந்து இலங்கைக்கும், மறுமார்க்கமாக இலங்கையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் வரவிருந்த பயணிகளின் முன்பதிவுகள் தற்காலிகமாகத் தடைபட்டுள்ளன.