2500 கண்டெய்னர்களுடன் மூழ்கிய கப்பல்... கடலில் மிதந்து வரும் ஐபோன்கள், செண்ட் பாட்டில்கள்... அள்ளிச் செல்லும் மக்கள்!

 
ஐபோன் ஹார்முஸ்

அமெரிக்கா - ஈரான் இடையேயான தொடர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சரக்குக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியுள்ளது. இதனால் கடலில் மிதந்த விலையுயர்ந்த ஐபோன்களை அப்பகுதி மக்கள் போட்டி போட்டு வாரிச் சென்ற சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 'ஜிஎஃப்எஸ் பிரைட்' என்ற சரக்குக் கப்பல் ஹார்முஸ் நீரிணைப் பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் அந்தக் கப்பல் கடுமையான சேதத்தைச் சந்தித்து இறுதியில் கடலில் முழுமையாக மூழ்கியது. எனினும், கப்பலில் பணிபுரிந்த 21 மாலுமிகள் உடனடியாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஐபோன்

மூழ்கிய அந்தக் கப்பலில் சுமார் 2,500 கன்டெய்னர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த அதிநவீன ஐபோன்கள் மற்றும் வாசனைத் திரவியப் பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த பொருள்கள் இடம்பெற்றிருந்தன. கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, அந்தப் பெட்டிகள் சேதமடைந்து விலைமதிப்பற்ற ஐபோன்களும் வாசனைத் திரவியங்களும் கடல் நீரில் மிதக்கத் தொடங்கின.

ஹார்முஸ் கப்பல் வணிக ஈரான்

கடலில் ஐபோன்கள் மிதப்பைக் கண்ட அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் சிறிய படகுகளில் உடனடியாக நடுக்கடலுக்கு விரைந்தனர். கடலில் மிதந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை எங்கு பார்த்தாலும் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் தங்களது படகுகளில் அள்ளிச் சென்றனர். உலகையே உலுக்கியுள்ள அமெரிக்கா - ஈரான் போர் மற்றும் மோதல் சூழலுக்கு நடுவே, பொதுமக்கள் ஐபோன்களை வாரிச் சென்ற இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.