சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்... சசிகலா இரங்கல்!

 
sivaji

 

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி இன்று (செப்டம்பர் 20) அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசன் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். அவர்களில் மூத்த மகளான சாந்தி நாராயணசாமி, குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவாஜி கணேசன் தனது மூத்த மகள் சாந்தி மீது கொண்டிருந்த பாசத்தின் அடையாளமாக, சென்னை அண்ணா சாலையில் அமைந்திருந்த தனது புகழ்பெற்ற திரையரங்கிற்கு 'சாந்தி தியேட்டர்' என பெயர் சூட்டியிருந்தார். இதன் மூலம் சாந்தி நாராயணசாமியின் பெயர் தமிழ் சினிமா வரலாற்றுடனும் நெருக்கமாக இணைந்துள்ளது.சாந்தி நாராயணசாமி திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். சிவாஜி கணேசன் நடித்த 'தங்கப்பதக்கம்' திரைப்படத்தின் தயாரிப்பில் அவரது பங்களிப்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாந்தி நாராயணசாமியின் மறைவு செய்தி வெளியானதைத் தொடர்ந்து திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சாந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா தனது எக்ஸ் பதிவில் சாந்தி நாராயணசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், அன்பு சகோதரி சாந்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார். மேலும், சாந்தி நாராயணசாமியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாந்தி நாராயணசாமியின் உடல் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.