தசரா ஊர்வலத்தில் மிரண்ட யானை: வெள்ளி அம்பாரி சேதம்... வைரல் வீடியோ!
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் தசரா விழாவையொட்டி நடைபெற்ற ஜம்பூ சவாரி ஊர்வலத்தில், வெள்ளி அம்பாரியைச் சுமந்து சென்ற சோமன்னா என்ற யானை திடீரென மிரண்டு ஓடியது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
ஊர்வலத்தின்போது யானை திசைமாறி ஓடியதில், அதன் மீது வைக்கப்பட்டிருந்த சுமார் 650 கிலோ எடையுள்ள வெள்ளி அம்பாரி கீழே விழுந்து சேதமடைந்தது. மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்தால் ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மயக்க மருந்து செலுத்தி யானையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில் பார்வையாளர்களுக்கு காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
