பேரதிர்ச்சி... பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றுவந்த 3 ஆசிரியைகள் கைது!

 
போதைப்பொருள் ஆசிரியை

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பெண் ஆசிரியைகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே பேராம்பிராவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள், பள்ளி வளாகத்திலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் போதைப்பொருள் விற்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. போதைப்பொருளுக்கு எதிராகக் கேரளா முழுவதும் நடத்தப்பட்டு வரும் ‘ஆபரேஷன் துபான்’ சிறப்புத் திட்டத்தின் கீழ், பேராம்பிரா காவல்துறையினர் அந்த ஆசிரியைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

போதைப்பொருள்

மருதோம்கராவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற ஆசிரியைக்குச் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருட்களைக் கடத்தும் இடைத்தரகராக இவர் செயல்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கீர்த்தனாவின் வங்கிச் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது, அதே பள்ளியில் பணியாற்றும் காவியா என்ற ஆசிரியைக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.

குற்றோத்து பகுதியைச் சேர்ந்த நிஷ்மா (30) என்ற மற்றொரு ஆசிரியையும் கைது செய்யப்பட்டார். இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு போதைப்பொருள் இருக்கும் இடத்தின் லொகேஷனை ஆன்லைனில் அனுப்பி வைக்கும் நூதன வழியில் விற்பனை செய்து வந்துள்ளார்.

போதைப்பொருள்

பள்ளி மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியைகளே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 'வேலியே பயிரை மேய்ந்த' இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 3 ஆசிரியைகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அதே பள்ளியைச் சேர்ந்த மற்ற ஆசிரியர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.