நாடு முழுவதும் அதிர்ச்சி... பிரபல வங்கியில் துப்பாக்கி முனையில் 3 கிலோ தங்கம் கொள்ளை!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் இன்று மதியம் புகுந்த ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல், சில நிமிடங்களிலேயே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கத்தை சுருட்டிக்கொண்டு தப்பியோடியது. வங்கியின் அன்றாடப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வங்கிக்குள் நுழைந்தனர். கையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த அந்த கும்பல், வங்கியின் ஊழியர்களையும் அங்கிருந்த வாடிக்கையாளர்களையும் மிரட்டி ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.

பின்னர் லாக்கர் அறையைப் பலவந்தமாகத் திறந்த கொள்ளையர்கள், அங்கிருந்த சுமார் 3 கிலோ தங்கம் மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைச் சுருட்டிக்கொண்டனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ₹5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜார்க்கண்ட் மாநில போலீசார், வங்கியின் நுழைவாயில் மற்றும் உட்புறம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்தாலும், அவர்கள் வந்த வாகனத்தின் அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மாநில எல்லைகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தப்பியோடிய கும்பலைத் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள வங்கியில் நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கியின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன
