அடுத்தடுத்து அதிர்ச்சி... மேலும் ஒரு கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வல்லபாக்கம் பகுதியில், தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைக் கவனிக்காமல் மிதித்த 17 வயது கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தோப்பிற்குச் சென்ற இடத்தில் சோகம்: வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வரபிரசாத் (17), விறகு வெட்டுவதற்காகத் தோப்பிற்குச் சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியைக் கவனிக்காமல் அவர் மிதித்துள்ளார். இதில் உடனே மின்சாரம் தாக்கி, வரபிரசாத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மின்சாரக் கம்பிகள் சரியாகப் பராமரிக்கப்படாமல் அறுந்து கிடப்பதே இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணம் என அப்பகுதி மக்களும் மாணவனின் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.
மாணவனின் மரணத்தால் ஆவேசமடைந்த உறவினர்கள், மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
