அடுத்தடுத்து அதிர்ச்சி... மெட்டா நிறுவனத்தில் மீண்டும் பணிநீக்கம் - 700 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்ப முடிவு!

 
மெட்டா மெட்டா

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த ஆண்டு மூன்றாவது முறையாகப் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது மேலும் 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மெட்டா நிறுவனம் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 1,000 ஊழியர்களையும், பிப்ரவரி மாதம் சுமார் 3,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்திருந்தது. அந்த வரிசையில் தற்போது 700 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். விற்பனை, மனிதவள மேலாண்மை மற்றும் ஹார்டுவேர் ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெட்டா

பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை வழங்குவது அல்லது மற்ற நிறுவனங்களில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என மெட்டா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மெட்டா நிறுவனம் தனது பாரம்பரியப் பணியாளர்களைக் குறைத்துவிட்டு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் மிகத்தீவிரமாக முதலீடு செய்து வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் AI துறையில் சுமார் 135 பில்லியன் டாலர் வரை மெட்டா முதலீடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2028-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகச் சுமார் 600 பில்லியன் டாலர் செலவிடப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

மெட்டா ஊழியர்கள்

"செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நிறுவனத்தின் வழக்கமான பணி நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும்" என அவர் முன்னரே கூறியிருந்தது, தற்போது இந்த ஆட்குறைப்பு மூலம் உண்மையாகி வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். மெட்டா மட்டுமல்லாமல் கூகுள், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களும் AI தொழில்நுட்பத்தை நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்புவதால், உலகெங்கிலும் உள்ள மென்பொருள் ஊழியர்களுக்கு வேலை இழப்பு அபாயம் அதிகரித்துள்ளது.