தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 4 பேர்... நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை!

 
நீட்

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மறுதேர்வு இன்று மதியம் நடைபெறவிருந்த நிலையில், தேர்வு பயம் காரணமாகத் தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த இளம் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த உம்மியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றியானந்தம். இவர் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற இலட்சியத்துடன் கடந்த சில மாதங்களாக நீட் தேர்விற்காகத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். ஏற்கனவே கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வின் குளறுபடிகள் காரணமாக, தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்திருந்த சிறப்பு மறுதேர்வு இன்று (ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடைபெறவிருந்தது. தேர்வு நேரம் நெருங்க நெருங்க வெற்றியானந்தத்திற்குத் தேர்வு குறித்த  அச்சமும், மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெற்றியானந்தம் தற்கொலை செய்து கொண்டார். மதியத் தேர்விற்குப் புறப்பட வைக்க மகனை அழைக்க வந்த பெற்றோர், அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொப்பம்பட்டி மற்றும் காரிமங்கலம் போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகத் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் வெற்றியானந்தம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த உருக்கமான மரணக் கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், "என்னால் நீட் தேர்வை எதிர்கொள்ள பயமாக இருக்கிறது; பெற்றோரைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை" எனத் தனது தேர்வு அச்சத்தை அவர் பதிவிட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று தர்மபுரியில் நடந்துள்ள இந்தச் சம்பவத்தையும் சேர்த்து, கடந்த ஒரே வாரத்தில் மட்டும் நீட் தேர்வு அச்சம் காரணமாகத் தமிழகத்தில் 4 இளம் மாணவர்கள் தங்களது அரிய உயிரை விபரீத முடிவின் மூலம் மாய்த்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.