தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி... வேடசந்தூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு - திண்டுக்கல்லில் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மனிதக் கழிவுகள் மிதந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்த மர்மநபர்கள், தொட்டியின் சுவரில் "தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ளது" என எச்சரிக்கை துண்டுச் சீட்டு ஒன்றையும் எழுதி ஒட்டிச் சென்றுள்ளனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று அக்கிராம மக்களிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மாணவர்கள் குடிக்கும் நீர்த் தொட்டியில் மர்மநபர்கள் இதுபோன்ற சமூகவிரோதச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
