மீண்டும் அதிர்ச்சி... நீட் மறுதேர்வு வினாத்தாள் தருவதாக மோசடி; 4 பேர் கைது!

 
நீட் தேர்வு நீட் தேர்வு

இந்தியாவையே உலுக்கி வரும் நீட் தேர்வு முறைகேடு விவகாரங்களுக்கு மத்தியில், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடி லட்சக்கணக்கில் பணம் பறிக்க முயன்ற கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர். 

வரும் ஜூன் 21-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற உள்ளதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சில மோசடி கும்பல், "எங்களிடம் ஜூன் 21-ல் நடக்கவிருக்கும் நீட் மறுதேர்வின் அசல் வினாத்தாள்கள் முன்கூட்டியே கைவசம் உள்ளது" என்று சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களில் விளம்பரம் செய்துள்ளனர்.

நீட் நுழைவுத்  தேர்வு

இதனை உண்மை என்று நம்பி, தங்களது பிள்ளைகளை எப்படியாவது டாக்டராக்க வேண்டும் என்ற பேராசையில் இருந்த பல அப்பாவிகளான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை இந்த கும்பல் ரகசியமாகத் தொடர்பு கொண்டு, வினாத்தாளைப் பெற வேண்டும் என்றால் பல லட்ச ரூபாய் அட்வான்ஸ் தர வேண்டும் என்று பேரம் பேசியுள்ளனர்.

இது குறித்து பீகார் மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ரகசியப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த  ரகசியத் தகவலின் பேரில், போலீசார் தனிப்படை அமைத்துச் சமூக வலைதளக் கணக்குகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அதில், இந்த மோசடிக் கும்பல் மாணவர்களுக்குக் கொடுக்கத் திட்டமிட்டிருந்த வினாத்தாள்கள் அனைத்தும் முற்றிலும் போலியானவை என்பதும், வினாத்தாள் தருவதாகக் கூறிப் பெற்றோர்களை ஏமாற்றிப் பல கோடி ரூபாய் சுருட்டத் திட்டமிட்டிருந்த மோசடியும் அம்பலமானது.

நீட்

இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் நடத்திய மின்னல் வேக வேட்டையில், இந்த மோசடி நெட்வொர்க்கை இயக்கிய முக்கியக் குற்றவாளிகளான ஹர்ஷ், அமன் குமார், கன்ஹையா குமார் மற்றும் ஹர்ஷ் கனோடியா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ஏராளமான போலி வினாத்தாள்கள், லேப்டாப்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.