அதிர்ச்சி... சென்னையில் எலி காய்ச்சலுக்கு மின் ஊழியர் உயிரிழப்பு... அடுத்த மாதம் புதுமனை புகுவிழா நடக்கவிருந்த நிலையில் சோகம்!

 
எலி காய்ச்சல்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் ஒருவர் லெப்டோஸ்பைரா பாக்டீரியா கிருமியால் பரவும் 'எலி காய்ச்சல்' பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அளந்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுபின் (31). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணியாளராக சென்னையில் பணியாற்றி வந்தார். சென்னையில் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் நிலவி வரும் சூழலில், பணியில் இருந்தபோது இவருக்கு எலி காய்ச்சலை உண்டாக்கும் 'லெப்டோஸ்பைரா' பாக்டீரியா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.

எலி காய்ச்சல்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுபினின் உடல்நிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டுப் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுபின் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த சுபினுக்கு அடுத்த மாதம் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் புதுமனை புகுவிழா நடைபெறவிருந்தது. புதிய வீட்டிற்குச் செல்லும் மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும், எலி காய்ச்சலால் சுபின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எலிக்காய்ச்சல்

மழைக் காலத்தில் தேங்கும் நீரில் நடமாடும் போது எலி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.