அதிர்ச்சி... குமரி கோவில்களில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மதுரையில் மீட்பு!

 
குமரி கோவில்களில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மதுரையில் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 கோவில்களில் கொள்ளை போன 2 ஐம்பொன் சிலைகளை மதுரையில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர். 2 பேரை தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரத்தில் மிகவும் பழமையான பார்த்தசாரதி கோவில் உள்ளது. இங்கு கடந்த 13ம் தேதி இரவு மர்ம நபர்கள் புகுந்து கருவறை கதவை உடைத்து 5 கிலோ எடை கொண்ட 1 அடி உயர ஐம்பொன் விஷ்ணு சிலை, வெள்ளியால் செய்யப்பட்ட முக கவசம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். 

அதே நாளில் அருகே உள்ள மங்காடு பால தண்டாயுதபாணி கோவிலில் கருவறை கதவு உடைக்கப்பட்டு அங்கு இருந்த ஐம்பொன் முருகன் சிலையும் கொள்ளை போனது. இந்த சிலை 1½ உயரத்தில் 15 கிலோ எடை கொண்டது. இந்த சம்பவங்கள் குறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது. அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குமரி கோவில்களில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மதுரையில் மீட்பு

விசாரணையில் இந்த 2 கோவில்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள்தான் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் சப்-இன்ஸ்பெஸ்டர் கார்த்திக், ஏட்டுகள் சஜீவ், ஜோஸ், அனி, ஜெகின் பிரபு ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பழைய குற்றவாளிகளின் விவரங்களை சேர்த்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் பூதப்பாண்டியை சேர்ந்த மரிய சிலுவை (55) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிலைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அத்துடன் அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்தது.

கடந்த 2010ம் ஆண்டு இரணியல் பகுதியில் ஒரு கோவிலில் நடந்த சிலை கொள்ளை வழக்கில் மரிய சிலுவையை போலீசார் கைது செய்து மதுரையில் சிறையில் அடைத்தனர். அங்கு இவருக்கும் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரை அருகே உள்ள திருப்புவனத்தை சேர்ந்த பிரேம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பும் நண்பர்களாக பழகி வந்தனர். அப்போது இருவரும் சேர்ந்து கோவில்களில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி வந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கும் புதுக்கடையை சேர்ந்த ஒருவருக்கும் ரெயில் பயணத்தின் போது பழக்கம் ஏற்பட்டது. அப்போது புதுக்கடையை சேர்ந்த நபர் தனது ஊரில் 2 கோவில்களில் ஐம்பொன் சிலைகள் இருப்பதாக கூறினார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து சிலைகளை கொள்ளையடிக்க முடிவு செய்தனர். இதற்காக புதுக்கடையை சேர்ந்த நபரின் வீட்டில் 2 நாட்கள் பதுங்கி இருந்து கோவில்களை நோட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து கடந்த 13ம் தேதி இரவு 3 பேரும் சேர்ந்து பார்த்திபபுரம் பார்த்த சாரதி கோவில் மற்றும் மங்காடு பால தண்டாயுதபாணி கோவில் ஆகியவற்றின் கருவறை கதவுகளை உடைத்து 2 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்தனர். பின்னர் இந்த சிலைகளை திருப்புவனத்தில் பிரேமின் வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். அத்துடன் பிரேமின் வீட்டில் புதுக்கடையை சேர்ந்த நபரும் தங்கி இருந்தார். மரியசிலுவை பூதப்பாண்டியில் தனது வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் போலீசில் சிக்கியுள்ளார்.

இளம் நடிகர் கைது

இதையடுத்து மரிய சிலுவை கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரேமை தேடி போலீசார் மதுரை அருகே திருப்புவனத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது பிரேம் இல்லை. போலீசார் வருவதை அறிந்து அவரும், புதுக்கடையை சேர்ந்த நபரும் தலைமறைவாகி விட்டனர். தொடர்ந்து வீட்டை சோதனையிட்ட போது அங்கு கொள்ளை போன 2 ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவற்றை போலீசார் மீட்டனர். ஆனால் வெள்ளிமுக கவசம் கிடைக்கவில்லை. இதையடுத்து மீட்கப்பட்ட சிலையை புதுக்கடைக்கு கொண்டு வந்தனர். அத்துடன் மரிய சிலுவையை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரேம் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

 

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

 

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web