இனிப்புப் பிரியர்களுக்கு ஷாக்: நெல்லை அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை கிடுகிடு உயர்வு!
தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க மற்றும் உலகப் புகழ்பெற்ற இனிப்பு வகைகளின் விலைகள் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் இனிப்புப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடையில் அல்வா விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் பிற கடைகளில் பால் அல்வா மற்றும் பால்கோவா விலைகளும் கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோ ரூ.320-லிருந்து ரூ.400 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைத் தடுத்து தங்களைக் காப்பாற்றக் கோரி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெல்லம், ஏலக்காய் மற்றும் நிலக்கடலை போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், கோவில்பட்டி கடலை மட்டாயின் விலை கிலோவுக்கு சுமார் 25% உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.220-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கடலைமிட்டாய் தற்போது ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவை தவிர, இதர ஸ்வீட் கடைகளில் ஜாங்கிரி விலை கிலோவுக்கு ரூ.70 வரையும், ஒரு பீஸ் குளோப் ஜாமூன் விலை ரூ.18-லிருந்து ரூ.22 ஆகவும், சாதாரண அல்வா கிலோவுக்கு ரூ.150 வராகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு காரணமாக விற்பனை சற்று சரிந்துள்ளதாகவும், இதனால் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
