பெங்களூரில் அதிர்ச்சி.. சாக்லெட் சாப்பிட்டுவிட்டுக் குளியலறைக்குச் சென்ற 23 வயது இளம் பெண் திடீர் மரணம்!

 
சாக்லெட் இளம்பெண்

பெங்களூரு அருகே உள்ள சுற்றுலாத் தலத்தில் சாக்லெட் சாப்பிட்டு முடித்துவிட்டுக் குளியலறைக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான வர்ஷா என்ற இளம்பெண், தனது உறவினர் மற்றும் ஒரு நண்பருடன் சுற்றுலா செல்வதற்காக கடந்த செப்டம்பர் 11ம் தேதியன்று சக்லேஷ்பூரில் உள்ள விடுதி ஒன்றிற்கு வந்துள்ளார். அங்கு குளிக்கச் செல்வதற்கு முன்பு அவர் சாக்லெட் சாப்பிட்டுள்ளார்.

சாக்லெட் சாப்பிட்டுவிட்டு குளியலறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது வர்ஷா திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகிலுள்ள ஹெட்டூர் மருத்துவமனைக்கும், பின்னர் சக்லேஷ்பூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாக்லெட் இளம்பெண்

பெங்களூருவிலிருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் உள்ள ஹாசனுக்கு வர்ஷா பயணம் மேற்கொண்டது அவரது பெற்றோருக்குத் தெரியும் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், உயிரிழந்த வர்ஷாவின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் சுற்றுலா வந்த ரகு மற்றும் தர்ஷன் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். வர்ஷாவின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே மரணத்திற்கான முழுமையான விவரங்கள் தெரியவரும்.