பெங்களூரில் அதிர்ச்சி... 24 வயதில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை... கணவனிடம் விசாரணை!
கர்நாடக மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் உயிரிழந்ததாகப் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில், அவரது கணவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு தெற்கு மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள ஒன்னகனஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுஷ்மிதா (24). இவருக்கும் துமகூரு மாவட்டம் எல்லாப்பூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மாகடியில் உள்ள தனது மாமா வீட்டுக்குச் சென்ற சுஷ்மிதா, பின்னர் கணவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இதற்கிடையே, அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கணவர், சுஷ்மிதாவின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மருத்துவமனைக்குச் சென்ற போது சுஷ்மிதா ஏற்கெனவே உயிரிழந்திருந்தார். தனது மகளை அடித்துக் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுவதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். வரதட்சணை கொடுமையா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கணவர் சீனிவாஸிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
