பெங்களூரில் அதிர்ச்சி... மனைவியைக் கொன்று சடலத்துடன் 3 நாட்கள் வாழ்ந்த கணவன்!
பெங்களூருவில் பணப் பிரச்சினை காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவரது சடலத்துடன் 3 நாட்கள் வீட்டிலேயே வாழ்ந்த நபர் ஒருவர், சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவின் எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள அக்ரஹாரா லேஅவுட்டில் உள்ள ஒரு காலி மைதானத்தில் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் இறந்தவர் அனுசுயா பெஹாரா (28) என்பதும், அவரை கொலை செய்த கணவர் சாகர் சந்திர ராவத் (32) என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பிகேஹள்ளி அருகேயுள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 11 அன்று பணப் பிரச்சினை காரணமாகக் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் சந்திர ராவத் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
கொலையைச் செய்த பின்னர் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்த அவர், கொலையான சடலத்துடனே மூன்று நாட்கள் அதே வீட்டிற்குள் வாழ்ந்துள்ளார். பின்னர் நான்காவது நாளான ஆகஸ்ட் 16 அன்று அதிகாலை நேரத்தில், மனைவியின் உடலைக் கட்டிலில் சுற்றி வீட்டின் அருக, இருந்த காலி இடத்தில் வீசிவிட்டு வீட்டைட்டைக் காலி செய்துள்ளார். அதன் பிறகு தான் வேலை பார்த்த ஹோட்டலிலேயே அவர் தங்கி தலைமறைவாகியுள்ளார்.

காலி இடத்தின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடல் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைகளைக் கொண்டு அடையாளம் கண்டனர். சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டு பிழைப்புக்காக பெங்களூருக்கு வந்த தம்பதியரிடையே நடந்த இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
