சென்னையில் அதிர்ச்சி... சிறுவனுக்கு குழந்தைகள் காப்பக வார்டன் பாலியல் தொல்லை!

 
பாலியல்

சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனுக்கு, அங்கு வார்டனாகப் பணிபுரிந்து வந்த குமரேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்த தகவலின்படி, வார்டன் குமரேசன் அச்சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதற்கு அந்தச் சிறுவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உடன்பட மறுத்ததால், ஆத்திரமடைந்த வார்டன் சிறுவனைத் தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசு இல்லத்திலேயே சிறுவனுக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வார்டன் குமரேசன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.