சென்னையில் அதிர்ச்சி... பயணிகள் முன்னிலையில் அரசுப் பேருந்து நடத்துநருக்கு அரிவாள் வெட்டு!

 
நடத்துநர் கண்ணகி நகர் அரிவாள்

சென்னை கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில், பயணிகள் கண்முன்னே அரசுப் பேருந்து தற்காலிக நடத்துநரை மர்மக் கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்கத்திற்காகத் தயாராக இருந்த தற்காலிக நடத்துநர் நித்யானந்தம் என்பவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த தேவர் ஜெயந்தி விழாவின் போது, நடத்துநர் நித்யானந்தத்தின் நண்பருக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி மோதலில் நண்பரைக் குறிவைக்க முடியாத அந்த நள்ளிரவுக் கும்பல், நண்பருக்குப் பதிலாக நடத்துநரான நித்யானந்தத்தையே குறிவைத்து இன்று பட்டப்பகலில் பேருந்து நிலையத்திற்கே வந்து சரமாரியாக வெட்டியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த நித்யானந்தம், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கொளத்தூர் மற்றும் கண்ணதாசன் நகர் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் அரங்கேறிய இந்த வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.