சென்னையில் அதிர்ச்சி.. தங்கை முறையில் உள்ள 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தாயும் உடந்தையாக இருந்த கொடூரம்!
சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியில் 2 பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், அவர்களின் மூத்த சகோதரன் மற்றும் தாய் ஆகிய இருவரையும் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 43 வயதுப் பெண், தனது முதல் கணவரைப் பிரிந்து 2-வதாக ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு முதல் கணவர் மூலம் 24 வயதுடைய மகனும், 2-வது கணவர் மூலம் 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

2-வது கணவர் இறந்த நிலையில், அப்பெண் 3-வதாக மற்றொருவருடன் வசித்து வருகிறார். இதில் 11 மற்றும் 9-ஆம் வகுப்பு படிக்கும் 2 மகள்களும் திருவள்ளூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் படித்து வந்தனர். விடுமுறை நாட்களில் வீட்டிற்குச் சென்றபோது, தாய் வழியில் அண்ணன் முறை கொண்ட 24 வயது வாலிபர் தங்களுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதியில் உள்ள சக மாணவிகளிடம் கதறி அழுதுள்ளனர்.
சக மாணவிகள் மற்றும் விடுதி நிர்வாகத்தின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரின் விசாரணையில், மூத்த மகன் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்து வந்தது உண்மை என்பதும், இக்கொடூரச் சம்பவத்தை அறிந்தும் தாய் அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக மறைக்க முயன்றதும் உறுதியானது.

இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றம் சாட்டப்பட்ட 24 வயது வாலிபரையும், அதற்கு உடந்தையாகவும் அலட்சியமாகவும் இருந்த தாயையும் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
