கோவையில் அதிர்ச்சி... உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 6 வயது மகன் அடித்துக் கொலை! தாய், கள்ளக்காதலனுக்குத் தண்டனை உறுதி!

 
கள்ளக்காதல் கள்ளக்காதல்

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயதுப் பெற்ற மகனை அடித்துக் கொன்ற வழக்கில், பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 22-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

கோவை சாய்பாபா காலனி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கோவை சாய்பாபா காலனி, கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (32). அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவருக்கு, அபிஷேக் (6) என்ற மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கணவரைப் பிரிந்த பிறகு குழந்தைகளுடன் திவ்யா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜதுரை (35) என்பவருடன் திவ்யாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. திவ்யாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற ராஜதுரை, அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

கள்ளக்காதல்

தங்களது உல்லாச வாழ்க்கைக்கு திவ்யாவின் இரண்டு குழந்தைகளும் இடையூறாக இருப்பதாகக் கருதிய கள்ளக்காதல் ஜோடி, குழந்தைகளைத் தொடர்ச்சியாக அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளனர். இந்தக் கொடுமைகளுக்கு இடையே, பள்ளிக்கு வந்த தனது தந்தையைக் கண்ட சிறுவன் அபிஷேக், "அம்மாவும் வீட்டுக்கு வரும் ஒரு மாமாவும் சேர்ந்து என்னை அடித்துக் கொடுமை செய்கிறார்கள்; என்னை உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள்" எனக் கதறி அழுதுள்ளான். அதற்கு அவனது தந்தை, புதிதாகக் கட்டி வரும் வீட்டின் பணிகள் முடிந்ததும் இருவரையும் தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆறுதல்படுத்தி அனுப்பியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, அங்குள்ள ஒரு கடையின் அருகே வைத்துச் சிறுவன் அபிஷேக்கை திவ்யாவும் ராஜதுரையும் சேர்ந்து கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களைக் கண்டித்துள்ளனர். இவர்களின் கடுமையான தாக்குதலால் நிலைகுலைந்து மயங்கி விழுந்த சிறுவனை, பொதுமக்கள் உதவியுடன் அவசரச் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து சாய்பாபா காலனி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தாய் திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை கோவையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆஜராகிக் குற்றச்சாட்டுகளுக்கான வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பித்தார்.

வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட திவ்யா மற்றும் ராஜதுரை ஆகிய இருவர் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்தார். இருவருக்கும் வழங்குவதற்கான தண்டனை விவரங்கள் அனைத்தும் வரும் ஜூன் 22-ம் தேதி நீதிமன்றத்தால் முறைப்படி அறிவிக்கப்படும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.